தங்களின் வருகைக்கு நன்றி

தங்களின் வருகைக்கு நன்றி
output:

Saturday, January 26, 2013

காதிர் முகைதீன் கல்லூரி குடியரசு தின விழா அணிவகுப்பு!





அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது.

இதில் கல்லூரியின் தாலாளர் ஹாஜி ஜனாப் K.S. சரஃபுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். கல்லூரியின் முதல்வர் ஹாஜி ஜனாப் A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.நாட்டு நல சேவைகளில் ஈடுபட்டு சாதனைகள் பல புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 34 ஆண்டுகள் ஆசிரியப்பணியை செம்மையாக மேற்கொண்ட பேராசிரியர் ஜனாப் சீனி கமால் அவர்கள் குடியரசு தின உரையை சிறப்பாக நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் ஜனாப் உதுமான் கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர், கல்லூரி முதல்வர் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Wednesday, July 4, 2012

மாத்தி யோசி....

யோசித்தல் என்பது ஒருவகை திறமை. அதிலும் வித்தியாசமாக யோசித்தல் என்பது மிகச்சிறந்த திறமையாகும். நாம் விரும்பினால் அதை வளர்த்துக் கொள்ள முடியும் என்கின்ற உண்மையை முதலில் நாம் மனதார நம்ப வேண்டும். அப்போது நிச்சயமாக நம்மாலும் மிகச்சிறந்த அசத்தலான யோசனையை வழங்கமுடியும். அதற்கான வழிமுறையைப் பற்றி இனிபார்ப்போம்.

யோசனை அல்லது சிந்தனை எங்கு தேவைப்படும். செக்குமாடு போல வாழ்க்கை என்பது ஒரே திசையில் பல்லாண்டு காலமாக போய்க்கொண்டு இருந்தால், அங்கே சிந்தனையின் அவசியம் தேவைப்படும். வழக்கமான வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைக்க, மாற்றி யோசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. மேலும் ஒரு குழுவின் மத்தியில் செயல்படும்போது நாம் மட்டும் தனித்து தெரிய வேண்டும் என்றால், நாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றும் நாம் ஏற்றிருக்கும் தலைமைப் பொறுப்பிலும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் அவ்விடத்தில் நம்மை நாம் வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நமக்கு கீழ் பணியாற்றுபவர்கள், நம்முடன் முழுமனதுடன் இணக்கமாக பணியாற்றுவார்கள்.

இப்படி மாற்றி யோசிக்கும் திறமையானது வாழ்வில் மிக மிக தவிர்க்க முடியாதபடி, ஒரு அவசியமான செயலாகிப் போய்விட்டது இன்று. ஆகையினால் அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்று அனைவருமே உள்ளோம்.

எப்படி அந்தத் திறனை வளர்த்துக் கொள்வது? என்று பார்க்கப்போனால், முதலில் நாம் ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்ப்பதற்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஒரு விஷயத்தை நேர்மறையாகச் சிந்திக்கத் தொடங்கினால், அதன் உச்ச எல்லையை தொட்டுவிட வேண்டும். அதுபோல் அதன் எதிர்மறை சிந்தனையிலும் அதன் உச்சநிலை வரை சென்றுவிட வேண்டும்.

நேர்மறைத் தன்மையை (சாதகத்தை) யோசிக்கின்றபோது, எதிர்மறைத் தன்மைக்கு (பாதக நிலைக்கு) கொஞ்சமும் இடம் அளிக்கக்கூடாது. அதுபோல் எதிர்மறையாக சிந்திக்கின்றபோது, நேர்மறைக்கு துளியும் இடம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு சிந்தித்த இரு யோசனைகளிலும் இருந்து, எந்தவித விருப்பு, வெறுப்பு இன்றி, அதன் உள்ளே உள்ள உண்மைத் தன்மையைப் புரிந்து, இதன் முடிவு இப்படி இருந்தால் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக இருக்குமே என்ற முடிவை எடுக்க பழகிக் கொள்ள வேண்டும். இத்தகைய முடிவுகள் எப்போதும் வியப்பூட்டக் கூடிய வகையிலே அமையும். இதனால் நம் யோசனையின் எல்லை விரிவடைவதுடன், ஒரு யோசனையில் இருந்து இன்னொரு யோசனைக்கு செல்லும் முறை வளர்ச்சியடைகிறது.

ஆக ஒரு விஷயத்திற்கான வித்தியாசமான தீர்வு என்பது, அதை நாம் பார்க்கின்ற தன்மையைப் பொறுத்து அமைகின்றது என்பது தெளிவாகிறது. பார்க்கின்ற தன்மை என்பது எதைப் பொறுத்து உருவாகின்றது என்றால், பல்வேறுபட்ட சூழலில் நாம் பெற்ற அனுபவம், கற்றகல்வி, எடுத்த சுயமுடிவுகளின் அடிப்படையிலே அமைகின்றது. மேலும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளும் தன்மை, விளங்கிக் கொள்ளும் விதம், அதை கவனிக்கும் பாங்கு முதலானவை கூட பார்க்கும் பார்வையைப் பொறுத்துத்தான் அமைகின்றது. ஆகையினால் நம் பார்வையை கூர்மையாக்கிக் கொள்வோம்.

எப்போது நம் யோசனை ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரை நடைமுறையில் உள்ள பொதுவிதியை மீறிச் செல்கின்ற போது, அந்த முடிவு சரியான முறையில் சாத்தியம் ஆகக்கூடிய வழிமுறையில் அமைந்திருந்தால் நிச்சயம் அந்த முடிவு ஆச்சரியத்தை உருவாக்கி, மற்றவரை அசத்திவிடும்.

எடுத்துக்காட்டாக, ஒரு புதிய கண்டுபிடிப்பு, அந்தக் கண்டுபிடிப்பை செய்துகாட்டும் போது பார்ப்பவர்க்கு ஜுஜுபியாகத் தோன்றும். அதையே அவர்களை செய்யச் சொன்னால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்களால் அதுபோல் ஒரு வேளை செய்து காட்ட முடியாமலும் போகும். உடனே என்ன சொல்வார்கள், என்னடா இது லாஜுக்குÐ ஒன்னும் புரியலÐ அவன் செய்யும்போது சுலபமாக இருந்தது, நாம செஞ்சா வரமாட்டுங்கிதுÐ என்று உடனே கண்டுபிடிப்பாளரைப் பார்த்து சார், சார், எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்Ð அது எப்படி சார் என்று கேட்போம். அதை அவர் விளக்கமாக, நம்முன் செய்து காட்டிய உடன், அடÐ ஆமாÐ இது இவ்வளவுதானாÐ எப்படியா உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது என நாம் வியந்து போகின்ற விஷயங்கள் தான் எத்தனை, எத்தனை.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் ஒரு வயது முடிவுக்கும், ஒன்பது வயது முடிவுக்கும் வேறுபாடு இருப்பது போல, இருபது வயது முடிவுக்கும், அறுபது வயது முடிவுக்கும் வித்தியாசம் இருக்கும். அதுபோல் எண்பது வயது முடிவுக்கும், நூறுவயது முடிவுக்கும் கூட பல்வேறு முரண்பாடுகள் இருக்கக்கூடும். என்றாலும், அந்தந்த காலகட்டதடதில் நம்முடைய முடிவுகள் மிகச் சிறந்தவையாக அமைய வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியையும், முயற்சியையும் நாம் மேற்கொள்கின்ற போது அது நிச்சயமாய் சாத்தியமாகும்.
சிறந்ததிழும், மிகச் சிறந்தது இருக்கும் என்கின்ற எண்ணமே, மாற்றுவழி தேடி மனதை உந்தித்தள்ளும். மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல, மாற்று வழிகளைத் தேட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுதான் பெரிய விஷயம். பொறுமையாக, மனதை அதற்கேற்றவாறு பக்குவப்படுத்தி விட்டால் அது எளிதாகிவிடும்.
சில நேரங்களில் மாற்று வழிகள் சிறப்பாக அமையாமல் போகக்கூட சாத்தியம் உண்டு. அப்போது நாம் பிடிவாதம் பிடிக்காமல், நம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகிக் கொள்ள வேண்டும். அதுமட்டும் போதாது நாம் மாற்றுவழி முறையைத் தேடுவதையும் நிறுத்திவிடக் கூடாது.

மோசமான நிலைக்கு மட்டுமே, மாற்று யோசனை வேண்டும் என்றில்லை. வெற்றிகரமான செயல்பாடு கொண்டிருக்கும், ஒரு செயலுக்கும் கூடத் தேவைப்படும். எப்படி என்றால் இதை இன்னும் எளிமையாக்க, திறன்மிக்கதாக்க, இதைவிட சிறந்த வேறு முறையில் எப்படி செய்ய முடியும். இன்னும் ஒருபடி மேலே போக முடியுமா? என்பதற்கும் அது தேவைப்படும்.

மாற்று யோசனையைப் பொறுத்தமட்டில், எந்த அளவுக்கு தகவல்கள் (தரவுகள்) இருக்கின்றதோ, அந்த அளவுக்கு சிறப்பாக நம் சிந்தனை அமையும். கைவசம் இருக்கும் விவரங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு என்ன இல்லை என்பது பற்றிய அறிவும் முக்கியமாகும். தேவையான தகவல் இல்லை என்றால், சிலவற்றை ஊகித்தும், நமது மதிப்பீடுகளை, உணர்ச்சிகளை எல்லாம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். சின்னஞ்சிறு தகவல் கூட முடிவு எடுக்க பேருதவியாக இருக்கும். எனவே கொஞ்ச நேரம் கிடைத்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள முன் வர வேண்டும்.

மாற்றி யோசிப்பவர்கள், அதிகமாகவே கேட்பார்கள். ஒரு விஷயம் சொல்லப்படும் விதத்தை வைத்தும், வார்த்தைகளை பயன்படுத்தும் முறையை வைத்தும், வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் அர்த்தத்தை வைத்தும், பல விஷயங்களை கிரகித்துக் கொள்ளுவார்கள். அதாவது சொல்லப்படுவதைத் தவிர வேறு என்ன அதில் இருக்கலாம், இருக்க முடியும் என்ற தீவிரமான கற்பனை ஆற்றல் கைவரப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

மாற்று யோசனை, மகிமையுடையதாக இருக்க வேண்டும் என்றால், அதன் கருத்து நல்ல முறையில் உரிய இடம் சென்று சேர வேண்டுமானால், அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், மாற்று யோசனையை கேட்பவரின் மொழியில் அது அமைந்திருக்க வேண்டும். இதுதான் மிக மிக முக்கியம்.

மாற்று யோசனை முடிவு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியது
பிரச்சனைதான் என்ன?

என்ன சூழ்நிலையில் முடிவு எடுக்க வேண்டி இருக்கியது? இப்போது இருக்கும் நிலைமைதான் என்ன? முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது எடுக்க வேண்டிய அவசியம் என்ன? பிரச்சனையை ஆறப்போட்டால் தானாகவே முடிந்து போக வாய்ப்புள்ளதா? அல்லது பிரச்சனை, தீவிரமாகுமா? முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறதா? நமது நிர்பந்தமா, வேறு யாராவது நிர்பந்திக்கின்றார்களா? முடிவு எடுக்க எவ்வளவு நேரம் இருக்கியது? விளைவுகள் எப்போது தெரியும்? முடிவை எப்போது எடுக்க வேண்டும்? இன்று, நாளை அல்லது ஒரு மாதத்திற்குள் ஒரு ஆண்டுக்குள்… எப்போது? எடுத்த முடிவு சரியா? தவறா? என்று எப்போது தெரியும்? முடிவு அதிரடி ஆனதா? அட்ஜெஸ்ட்மெண்ட் முடிவா? ஒன்றை நிறுத்தப்போகிறோமா? தொடங்கப் போகிறோமா? முடிவு தவறானால் மாற்ற வழி இருக்கிறதா?
அடேயப்பாÐ இத்தனை கேள்வியா? மலைப்பாக இருக்கிறதா? மனம் தளர வேண்டாம். சித்திரமும் கைப்பழக்கம்Ð செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல, இந்த முறையில் சிந்திக்கச் சிந்திக்க மனம் அந்த நிலைக்குத் தயாராகிவிடும். பின்பு நாமும் மிக விரைவாக வியக்கத்தகும் மாற்று வழிகளை கொடுக்கக்கூடிய மிக முக்கிய நபராகிப் போவோம். முயற்சிப்போம். முடியாதது எதுவுமில்லை.

மாற்று யோசனை முடிவிற்குப் பிறகு என்ன நடக்கும்?

நம்முடைய பாணி என்ன? நம்மைப் பற்றிய அடையாளம் எல்லாம் இங்கு தான் வெளிப்படுகின்றது. எனவே நம்முடைய இமேஜிற்கு சரியான முடிவை எடுக்கப் பழகுவோம். இல்லையென்றால், நீயா இப்படிச் செய்தாய்Ð என்கின்ற ஆச்சரியத்திற்கு ஆளாகிப்போவோம். எந்த முடிவாக இருந்தாலும் அதில் ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். எதையும் கவனமாகக் கையாண்டோம் என்றால் காரியச்சித்தி கைகூடும். நாம் என்ன அடைய விரும்புகிறோம் என்பதில் தெளிவு இருந்தால் எது முக்கியம் என்று தெரிந்திருந்தால் ஒரு விசயத்தை திட்டமிட்டுச் சிந்தித்து மனத்தை ஒருமுகப்படுத்தி நம்பிக்கையுடன் ஜாலியாக சுலபமாக ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்து மகிமை பெறலாம். வாருங்கள். மாற்றி யோசிக்கலாம். மகிழ்வோடு.

Sunday, June 19, 2011

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!





“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.
மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


ஆனால் நாமூரில் நன்றாக விளைந்துகொண்டு இருக்கும் தோப்புகளை எல்லாம் அழித்துவிட்டு மனைகளாக உருமாற்றி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறோம்.

நம் முன்னோர் நமக்காக சேமித்து வைத்த சொத்துகளை இப்படி அழித்து விட்டால், நம் சந்ததியினருக்கு என்ன செய்யப்போகிறோம் 






மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.





என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை :பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.



எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.



நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

(நன்றி : புதிய தலைமுறை)