இது ஒன்னும் கல்வி விழிப்புணர்வு கட்டுரையெல்லாம் இல்லை சும்மா கொஞ்சம் காத்து வாங்குறதுக்கு.
பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!
பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.
பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.
எட்டாவது நிமிஷம் டீ வரும்.
அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.
பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.
எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?
ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..
காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.
"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..
நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.
இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?
அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!
மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!
அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!
No comments:
Post a Comment